சென்னை: சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,”திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரப் பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறது. தமிழகம், இந்திய மற்றும் உலகளவில் விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு ’கனவு இல்ல திட்டம்’ என்ற பெயரில் வீடு வழங்குகிற மகத்தான, இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும் இலக்கிய மாமணி என்ற விருதும் வழங்கிவருகிறது. செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் வழங்கும் விருதுகளையும் காலதாமதமின்றி வழங்கிவருகிறது. மேலும், புதிதாக மாவட்டந்தோறும் இலக்கியப் பங்களிப்பு செய்தவர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.
இப்படிப் பல போற்றத்தக்க, எழுத்தாளர்களை ஊக்குவிக்கிற அரிய செயல்களைச் செய்துவருகிற தமிழக அரசு சாகித்ய அகாடமி விருதுபெற்ற நூல்களைக் குறைந்தபட்சம் 5000 பிரதிகளாவது நூலகங்களுக்கு வாங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வாங்கவில்லை.
எழுத்தாளர்களை ஊக்குவிக்கிற அதே நேரத்தில் அவர்களுடைய நூல்களைத் தமிழகம் முழுவதும் அறியசெய்யவதற்கான ஒரு முயற்சியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு தமிழக எழுத்தாளர்களின் சார்பாக மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுத்தாளர் இமையம் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: '80 வயது ஆனாலும் பிளே பாயாக தான் இருப்பார்' - உதயநிதியை சாடிய அண்ணாமலை