சென்னை: தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் பல்வேறு தீர்மானங்கள் அடங்கிய மனுவை அளித்தார்.
தனி கல்விக் கொள்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணவர்கள் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து, மிக நேர்த்தியாக மதிப்பெண் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து தமிழ்நாட்டிற்கு என்று தனி கல்விக் கொள்கையை உருவாக்கிடவேண்டும்.
கழிவறை வசதி
தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதியக் கழிவறைகள் ஏற்படுத்தி தரவேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
சிறப்பு வகுப்புகள்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதி மூலம் சிறப்பு வகுப்புகள் அமைத்திட வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினியை இலவசமாக வழங்கிட வேண்டும்.
வயது வரம்பு
தமிழ்நாட்டில் இயங்கும் பிற்பட்ட நலத்துறை உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைக்கப்பட வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் செய்யப்படுவது போன்று, ஆசிரியர்கள் பதவி உயர்விலும் 25 விழுக்காடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 மற்றும் 45 என்பதை ரத்து செய்து பழைய முறையினை அமுல்படுத்திட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 21 இடங்களில் ஐ.டி.ரெய்டு... பின்னணி என்ன?