சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இந்தியாவில் சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனாலும், அதற்கான பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா பேரிடரில் ஓய்வின்றி பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களின் வலிகளையும், உணர்வுகளையும் அரசு புரிந்துகொள்ள மறுப்பது தான் வேதனையாக உள்ளது. கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து இதுவரை நிவாரணம் தரப்படவில்லை. திவ்யா விவேகானந்தன் முதலமைச்சருக்கு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பிறகும், கல்விக்கேற்ற அரசு வேலை வழங்கப்படவில்லை.
சட்டப்பேரவையில் வரும் 29ஆம் தேதி நடைபெறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் போது, திவ்யா விவேகானந்தனுக்கு அவரது கல்வி தகுதிக்கேற்ற அரசு வேலை மற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது வெளியிட்ட ஊதிய உயர்வு அரசாணையை செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மே 18ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிடுவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'திமுக அரசு சொன்னதைத் தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும்' - மீண்டும் உரக்க உரைத்த முதலமைச்சர் ஸ்டாலின்