மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பரவலாக்கல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்னையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் முறைப்படி நிரப்பப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. சமூக நீதித் துறைக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் 90 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
உச்சநீதிமன்றம் விவசாய சட்டங்களை நடைமுறைப்படுத்த தடை விதித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும். பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேசுவதற்கும், சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு தயாராக உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுப்படி மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசு கட்சி மூன்று அல்லது நான்கு தொகுதிகளை கேட்போம்.
தற்போது அதிமுக இரண்டு பிரிவுகளாக உள்ளது. முதலமைச்சர், துணை முதல்வர், சசிகலா அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். டிடிவி தினகரன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது எனக்கு நல்ல நண்பராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவினை நிறைவேற்றுவதற்காக மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என அவருடன் பேசுவேன். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.