சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரிகள் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்த பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் மீண்டும் நாளை (ஜூலை 14) முதல் போராட்டத்தை தொடங்குகின்றனர். அரசு அதிகாரிகளை சந்திக்காமல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வந்து சந்திக்கும் வகையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆசிரியர் பணிக்கு மீண்டும் போட்டித்தேர்வு என்ற அரசாணை 149 நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்ச்சி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை திரும்பப் பெற்று தேர்ச்சிப் பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும்.
போராட்டம் திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை அரசு அதிகாரிகளை 100 சதவீதம் சந்திக்க கூடாது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக வருகை தந்து நமக்கான தீர்வை அன்றைய தினமே அரசின் பிரதிநிதியாக இருந்து பெற்றுத்தர வேண்டும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் தகர்தெரிவதற்கும் தயங்க மாட்டோம் என ஏற்கனவே உங்களிடத்தில் உறுதியளித்தோம் அதனை இப்போது உங்கள் முன்னிலையில் நிகழ்த்தப் போகிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:‘பள்ளிக்கூடம் போறோம்... கூடுதல் பஸ் விடுங்க...’ - அரசு பேருந்தை சிறை பிடித்த பள்ளி மாணவர்கள்