சென்னை: சென்னையில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் மாநகராட்சி சார்பில் துண்டிக்கப்பட்டதுடன் ரூ.5,98,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில், ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக் காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில், 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், 5,98,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,41,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ரூ.1,36,000 அபராதம்!