சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
சசிகலா கொடியேற்ற ஏதுவாக, எம்ஜிஆர் இல்லம் அமைந்துள்ள நுழைவுவாயில் அருகே நடைபாதையில் அமமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லக்கி முருகன் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளார். அந்த கொடிக்கம்பம் தங்கள் இல்லத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியும், நடைபாதைக்கு இடைஞ்சலாகவும் உள்ளதால் அதை அகற்றக்கோரி எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் பரங்கிமலை துணை ஆணையர், நந்தமாக்கம் காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
இந்நிலையில் அதே இடத்தில் லக்கி முருகன் மீண்டும் கொடிக்கம்ப மேடையை கட்டியுள்ளதால், தங்களது அனுமதி இல்லாமல் மீண்டும் உருவாக்கியுள்ளதால் அந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சக்தி சுகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொடிக்கம்பம் அகற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து தெரிவிக்கும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும். லக்கி முருகனுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.