சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை பரிந்துரைத்து வருகின்றனர். அதனால் ரெம்டெசிவிர் மருத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக மக்கள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ரெம்டெசிவிர் மருந்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் விற்பனை செய்துவந்தது. அதன்பின், விற்பனையகம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, மே 18ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று(மே.16) அறிவித்தார். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்தை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் பெற பொதுமக்கள் வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காவல்துறையின் அறிக்கையில், ’ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜவஹர்கலால் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து, நாளை முதல் (மே.18) தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, நேரு ஸ்டேடியத்தில் இன்று(மே.17) முதல் ரெம்டெசிவிர் வழங்கப்படமாட்டாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.