தமிழ்நாடு அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், “அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்க விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. நிவாரண உதவி தொகை 1,000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் தேதி பெறக்கூடிய டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்தார். இதில் இன்றும், நாளையும் வழங்கப்பட்டுள்ள டோக்கன்களுக்கு நிவாரண உதவித் தொகை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும். பணி முடிவடைந்தவுடன் வீடுவீடாக சென்று அத்தியாவசிய பொருள்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன்களை வழங்கியும் நிவாரண உதவி தொகை 1,000 ரூபாய் வழங்கப் படவேண்டும். நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் போதே விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், 5ஆம் தேதியன்று நியாயவிலைக் கடைகள் இயங்காது. அன்றைய தினமே வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருள்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிட்ட டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்கப்பட வேண்டும். அன்றைய தினமே குடும்ப அட்டைதாரர்களுக்கு நிலுவை தொகை மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்கி முடிக்க வேண்டும்.
ஆறாம் தேதியன்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட அட்டைதார்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் நியாய விலை கடையில் வழங்க வேண்டும். விடுபட்ட மக்களுக்கு விற்பனை மையத்தின் மூலமாக நிவாரண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
ஏழாம் தேதியன்று டோக்கன் வழங்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நிவாரண உதவி தொகை 1,000 ரூபாய் வழங்க கூடாது. மேலும் டோக்கன் வழங்கப்படும் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே பொருள்களை பெற நியாயவிலை கடைகளுக்கு வரவேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும். நிவாரண உதவித் தொகை 1,000 ரூபாய் விற்பனை நிலையங்கள் மூலமாக வழங்கப்பட வேண்டும்.
பதிவேட்டில் கையொப்பம் பெறும் நடைமுறை பின்பற்ற வேண்டும். வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் நபருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மூலமாக மாஸ்க் மற்றும் கிருமி நாசினி போதுமான அளவு வழங்க வேண்டும் மேலும் சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிவாரண உதவி தொகை ரொக்கத் தொகையைப் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ரொக்கமாக நியாயவிலை கடைகளுக்கு வழங்க வேண்டும். கூட்டுறவு நியாயவிலை கடைகளுக்கு தேவைப்படும் நிதி வழங்கப்படுவதை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...சென்னையில் 8 இடங்கள் மூடப்பட்டு சீல்!