சென்னை: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், அக்குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் கடந்த 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்தத் திட்டத்தினை இன்று (ஜுன்.16) தொடங்கி வைக்கிறார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
- பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
- பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் அரசே ஏற்கும்
- கரோனா தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய், அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.
- பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கும்பட்சத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படும்.
- தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, பிரதமரின் நிதியுதவி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். சீருடை, புத்தகங்கள் இந்த நிதியில் இருந்தே வழங்கப்படும்.
- ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
- குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களாகவோ இருக்கும்பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் கிடைக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2024 மக்களவைத் தேர்தல்: வேலையை ஆரம்பித்த பாஜக!