சென்னை: அயனாவரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர், ராஜதேவ்நாத்(21). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் சிமென்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல ராஜதேவ்நாத் கடையில் இருந்த போது, இரண்டு இளைஞர்கள் முகக்கவசம் அணிந்து கடைக்கு வந்து, செல்போன் பேசிய படியே சிமென்ட் விலை குறித்து ராஜதேவ்நாத்திடம் விசாரித்துள்ளனர். பின்னர் திடீரென அவர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கோடாரி ஆகிய ஆயுதங்களை கொண்டு ராஜதேவ்நாத்தை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
கஞ்சா வாசனையால் முன்னதாகவே சுதாரித்துக்கொண்ட ராஜதேவ்நாத் தாக்க வரும்போது அவர்களை கீழே தள்ளிவிட்டு, கடைக்குள் புகுந்து நூலிழையில் உயிர் பிழைத்து தப்பி ஓடியதால், ஆத்திரத்தில் இரண்டு நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து ராஜதேவ்நாத் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்வதற்காக வந்த நபர்கள் விட்டுச்சென்ற செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர்.
விசாரணை நடத்தியபோது தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது செல்போன் எனத் தெரியவந்தது. உதவி ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செந்தில், கோகுல் மற்றும் அவர்களுக்கு கொலை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்த விக்னேஷ் என்பவனையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அயனாவரம் மேட்டுத்தெருவில் வசித்து வரும் ஜெய்சிங்கிற்கு சொந்தமான 2 கோடி நிலம் தொடர்பாக குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தகராறில், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஜெய்சிங் மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகிய இருவரையும் ஜெய்சிங்கின் மகன் ஹரிநாத் என்பவர் கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்த வழக்கில் ஹரிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹரிநாத் தூத்துக்குடி ஏரல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் வர உள்ளதால், ஹரி நாத்திற்கு எதிராக அவரது உறவினர் பொன்னிலா(53) என்பவர் சாட்சியளிக்க உள்ளார்.
இதனால் சாட்சியளிக்க விடாமல் தடுப்பதற்காக தூத்துக்குடியில் இருந்த ஹரிநாத் கூலிப்படையை ஏவி, உறவினர் பொன்னிலாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடியே கூலிப்படை தலைவன் விக்னேஷ் மூலமாக உறவினர் பொன்னிலாவின் மகனை தீர்த்துக்கட்ட செந்தில், கோகுல் ஆகியோர் சென்னைக்கு வந்து கடையில் யாரும் இல்லாத நேரத்தில் பொன்னிலாவின் மகன் ராஜதேவ் நாத்தை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அப்போது சம்பவ இடத்தில் தவறவிடப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த செந்திலின் செல்போன் மூலமாக போலீசார் துப்பு துலங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களை கொலை செய்ய 10 லட்சம் ரூபாய் விக்னேஷிடம் பேரம் பேசியதும், அதில் விக்னேஷ், செந்தில், கோகுல் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் தருவதாக பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது.
செந்தில், கோகுல் ஆகியோர் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்பதும், உயர் ரக இருசக்கர வாகனங்களான கேடிஎம், ஆ15 இருசக்கர வாகனங்களை வாங்கவே இந்த கொலைக்கு சம்மதித்ததாகவும், கொலை செய்தவுடன் முன்ஜாமீன் எடுத்து விடுவதாகவும், முன்பணமாக ரூ.8000 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹரி நாத், கூலிப்படை தலைவன் கோகுல், செந்தில், விக்னேஷ் ஆகிய நான்கு பேரை அயனாவரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். சாட்சிக்கு வராமல் தடுக்க கூலிப்படையை ஏவி உறவினரையே கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "குடிச்சிட்டு வண்டிய தள்ளிட்டு வந்தா ஃபைன் போடனும்னு ரூல்ஸ் இருக்கா..?" போலீசாருடன் மல்லுகட்டிய இளம்பெண் வீடியோ!