சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2013ஆம் ஆண்டு ரயில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வான ஆர்.லக்ஷ்மி பிரபா என்பவர், நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதியாக பி.இ.படிப்பை முடித்திருந்ததால் தேர்வு நடைமுறையிலிருந்து அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து லக்ஷ்மி பிரபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
அப்போது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள தமிழ்நாட்டில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செயல்பாடு மனுதாரரின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்வு அறிவிப்பிலேயே கூடுதல் கல்வித்தகுதி உடையவர் பணி நியமிக்கப்பட்டாலும் நீக்கப்படுவார் என தெரிவித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுப்பதற்கில்லை என்றாலும், கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.