சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், கல்லூரியின் நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வளர்ச்சியை பிடிக்காத சக ஆசிரியர்கள், மாணவிகளைத் தூண்டி விட்டு ஹரி பத்மனுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு சம்பவம் நடந்ததாகக் கூறி, 4 ஆண்டுகளுக்குப் பின் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரிபத்மன் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், இந்த வழக்குத் தொடர்பாக, 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்றவர்களைக் கைது செய்ய வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது எனவும்; ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணை குழுவை மாற்றியமைக்கக்கோரி ஏழு மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஹரிபத்மனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதே சமயம், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற ஹரிபத்மன் தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.
இதையும் படிங்க: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!