இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2009ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன் ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், அரசின் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்துசெய்ய தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. அவ்வாறு அரசாணை திருத்தப்படும்போது, 2009ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கணிசமாகக் குறையும். அது மருத்துவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
ஓய்வூதியக் குறைப்புத் திட்டத்தின் மூலம் 300 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம் என்று அரசு நினைக்கிறது. ஆனால், அரசின் கணக்கு தவறாகும். 2018ஆம் ஆண்டில் ஓய்வூதிய அதிகரிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, அதனால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 640 பேர் மட்டுமே. அவர்கள் அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், மாதத்திற்கு மாதம் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இத்தகைய சூழலில், அவர்களின் ஓய்வூதியத்தைக் குறைப்பதால் மாதத்திற்கு 2 கோடி ரூபாய் கூட கிடைக்காது. அதை வைத்துக் கொண்டு அரசின் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க முடியும்?
மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கண்டிப்புடன் ஆணையிட்ட பிறகு தான் 2018ஆம் ஆண்டு ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டது. அதுகுறித்த அரசாணையை அப்போது பிறப்பித்தது அப்போதைய நிதித்துறைச் செயலர் சண்முகம்தான். இப்போது அந்த அரசாணையை ரத்து செய்யப்போவதாகத் தீர்மானித்திருப்பது தலைமைச் செயலர் சண்முகம்தான். இந்த அரசாணையை அவரே ரத்து செய்வது எந்த வகையில் நியாயம்?
மருத்துவர்களின் பணி கடவுளுக்கு இணையானது என்பதைக் கரோனா நோயை ஒழிக்க அவர்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுவதிலிருந்தே அறிந்திருப்போம். ஒவ்வொரு காலத்திலும் பணியாற்றிய மருத்துவர்கள், அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பெருந்தொற்று நோய்களுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடியிருப்பர். அவர்களின் சேவைகளைப் போற்றவேண்டிய அரசு, அவர்களின் ஓய்வூதியத்தைக் குறைப்பது அழகல்ல.
இவை அனைத்துக்கும் மேலாக ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; உரிமை. எனவே, மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். 70, 80 வயதைக் கடந்த மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை அரசு உறுதிசெய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.