சென்னை: கோயில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழநி முருகன் கோயிலுக்குச்சொந்தமான, ரூபாய் 250 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டெடுக்கும் பணி இன்று(ஜுன் 7) சாலிகிராமத்தில் நடைபெற்றது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "சாலிகிராமத்தில் கருணாநிதி தெருவில் 250 கோடி மதிப்புள்ள 5.50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதனை ஆக்கிரமிப்பு செய்து, வாகனம் நிறுத்தப் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அது மீட்கப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து உள்ளோம். அதற்குள் அவர்கள் அந்த வாகனத்தை நிலத்திலிருந்து எடுக்க வேண்டும். தற்போது மீட்டநிலம் வடபழனி முருகன் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வாகனம் நிறுத்துவதற்கு யாரும் அனுமதி வழங்கவில்லை. அவர்கள் இந்து அறநிலையத் துறைக்கு எந்தப் பணமும் கொடுக்கவில்லை. அவர்கள் கூறுவது உண்மை இல்லை.
இது வெறும் ட்ரெய்லர் தான்
முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாத காலம் தான் நிறைவடைந்துள்ளது, அதற்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் பார்க்கப்போகிறீர்கள்.
ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கோயில் நிலங்களும் மீட்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்திற்கு 100 நாட்களில் முதலமைச்சர் நல்ல பதிலை அறிவிப்பார். கோயில் நிலத்தில் நீண்ட நாள் இருக்கும் மக்களுக்கு அவர்கள் நலம் கருதி, அந்த நிலத்தை அவர்களுக்கே வாடகைக்கு விடுவோம்.
தவறு யார் செய்தாலும் தக்க நடவடிக்கை
கோயில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தற்போது மீட்ட இடத்தில் மக்களுக்கு நல்லது எதுவோ அது செய்யப்படும். பாஜக நாங்கள் இருக்கிறோம் என்பதற்கு ஏதோ பேசி இருப்பார்கள். நல்லது என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். இல்லை என்றால், அதை ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள மாட்டோம். தவறு யார் செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கோட்டை முதல் சிங்கம் வரை' - முதலமைச்சரின் முதல் 30 நாள்கள்