இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, ”ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவக் கருவிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை போக்கிட முடியும். இந்த முதல்கட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில் தமிழ்நாடு அரசே நேரடியாக பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவும், ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவக் கருவிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மூலம் உற்பத்தி செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் எச்எல்எல் பயோடெக் (HLL biotech) நிறுவனத்தையும், ஒப்பந்தம் மூலம் தமிழ்நாடு அரசே ஏற்று, கரோனா தடுப்பூசிகளையும் இதர தடுப்பூசிகளையும் நேரடியாக உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். மத்திய அரசு இந்நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க, 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தப் புள்ளியை தனியார் நிறுவனங்களிடம் கோரியுள்ளது.
இந்நிறுவனம் தனியாரிடம் செல்வதைவிட, தமிழ்நாடு அரசே ஏற்பது நல்லது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெரும் பயன் கிடைக்கும். எனவே, தமிழ்நாடு அரசே எச்எல்எல் பயோடெக் (HLL biotech) நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து பெற்று, கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசின் அனுமதியுடன் உற்பத்தி செய்ய முன் வர வேண்டும்.
இதன் மூலம் அந்த பொதுத்துறை நிறுவனத்தை காப்பதுடன், மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் இதர தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்திட முடியும். மகாராஷ்டிரா தனது மாநிலத்துக்கு சொந்தமான ’மும்பை ஹாஃப்க்கின் பயோ ஃபார்மா’ (Haffkine Biopharma) தடுப்பூசி நிறுவனம் மூலம் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய மத்திய அரசின் அனுமதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே, கோவாக்சின் தடுப்பூசியை தமிழ்நாடு அரசே சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் நிறுவனம்’ மூலமும், செங்கல்பட்டிலுள்ள எச்எல்எல் பயோ டெக் (HLL Bio tech) நிறுவனம் மூலமும் உற்பத்தி செய்வது நல்லது. குறைந்த காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை வழங்கிட முடியும்.
மருத்துவ உபகரண உற்பத்திக்காக, செங்கல்பட்டில் எச்எல்எல் மெடி பார்க் (HLL MEDI PARK) என்ற நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய அரசுடன் ஒப்பந்தமிட்டு இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்திட முடியும். இது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசே நேரடியாக பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மருத்துகளை, மருத்துவ உபகரணங்களை, தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதின் மூலம் குறைந்த விலையில், தேவையான மருந்தை தரமாகவும் குறுகிய காலத்திற்குள்ளும் உற்பத்தி செய்திட முடியும்.
தமிழ்நாட்டின் தேவை போக பிற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் அவற்றை விற்பனை செய்திடவும் முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு நீண்ட காலத்திற்கு பொருளாதார ரீதியாகவும் பலன் கிடைக்கும். எனவே இவை குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சரின் பயணத்திட்டம்