சென்னை: இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மே 15ஆம் தேதி முதல், முதல் தவணையாக ரூ. 2,000; ஜூன் 15ஆம் தேதி இரண்டாம் தவணையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.4,000 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இக்குடும்பங்களுக்கு முழு ஊரடங்கின்போது தேவைப்படும் மளிகைப் பொருள்கள் வழங்கிடும் பொருட்டு 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஜூன் 15ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
ஜூலை 31க்குள் நிவாரணம்
99 விழுக்காட்டிற்கும் மேலாக அட்டைதாரர்கள் தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினைப் பெற்றுள்ள நிலையில், நிவாரணத் தொகையை இதுவரை பெறாதவர்கள் தங்களுடைய நியாயவிலைக் கடைகளில் ஜூலை 31ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.
கரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் ஜூலை 31ஆம் தேதிக்குள் பெற இயலாத, அரசி குடும்ப அட்டைதாரர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாயவிலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து, அனுமதிபெற்று அதன்பின் அவர்களுக்கு உரிய நியாயவிலைக் கடையிலிருந்தே நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கான தகவல்
2021ஆம் ஆண்டு மே 10 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சற்றேறக்குறைய மூன்று லட்சம் மனுதாரர்களுக்குக் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இக்குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேசன் பொருட்களைத் தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆதலால், புதிய குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து ரேஷன் பொருள்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் அனுமதி இல்லை - கூட்டுறவுத் துறை