தமிழ்நாட்டில் வன்னிய சமுதாய மக்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய தேவர் பேரவை, தமிழ்நாடு சூரியகுலம் வண்ணார் சங்கம், அம்பத்தூர் நாடார் கூட்டமைப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் தலைமையில் சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு இன்றுமுதல் பெரும் தொடர் போராட்டம் நடைபெற உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை நேக்கி வந்தவர்கள் பலர் பெருங்களத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால், பாமகவினர் அந்தந்தப் பகுதிகளிலேயே சாலை மறியல் போராட்டத்திலும், பெருங்களத்தூரில் சிலர் ரயில் மறியல், மின்சார ரயில் மீது கல்லெறிந்தும் தாக்குதல் நடத்தி பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.
அதில், "என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது... உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில்தான் உள்ளன" எனப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு சமூக நீதி வேண்டும் உள்ளிட்ட ஹேஸ்டாக்குகளையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தின் முதல் நாளே பல்வேறு சேதங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுவருகிறது. இந்தப் போராட்டம் வரும் 4ஆம் தேதிவரை திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வன்னியர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டத்தை கையிலெடுக்கும் பாமக!