வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியின் முழு உருவ படம் திறந்து வைக்கப்படும் என அறிவித்திருந்தார். ஏற்கனவே, ராமசாமி படையாச்சிக்கு தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ரூ. 2.15 கோடி மதிப்பீட்டில், 0.69 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள நினைவு மண்டபத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல், ராமசாமி படையாச்சியின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி ராமசாமி படையாச்சியின் உருவப்படம் வருகின்ற 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த படம் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் 5ஆவது மற்றும் 6ஆவது பாகத்துக்கு இடையே அமைக்கப்படவுள்ளது.