பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ஆபத்தானவை அவை தமிழ்நாட்டில் அமைக்கப்படக் கூடாது என வலியுறுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் ஆலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட ஆலைகள் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கத் தேவையில்லை; மாறாக பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கலாம் என மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள யோசனை மிகவும் ஆபத்தானது; கண்டிக்கத்தக்கது.
பொது கழிவுநீர் திட்டம், தோல்வி அடைந்த தத்துவம்
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Common Effluent Treatment Plant -CETP) என்ற தத்துவம் உலகம் முழுவதும் தோல்வியடைந்த, சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டமாகும். பொது சுத்திகரிப்பு நிலையங்கள் என்ற பெயரைக் கேட்கும்போது, அவை சுற்றுச்சூழலுக்கு ஆதரவானதைப் போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால், உண்மையில் இவை சுற்றுச்சூழலை சீரழிக்கக் கூடிய மோசமான திட்டமாகும்.
சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் ஆலைகளை அமைக்கும்போது அங்கிருந்து வெளியேறும் கழிவு நீரை தூய்மைப்படுத்த தொழிற்சாலை வளாகத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க மிக அதிக செலவு ஆகும். அதைத் தவிர்ப்பதற்காகவே மத்திய அரசின் மானியத்துடன் பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் பொது சுத்திகரிப்பு ஆலைகள் அவற்றுக்குரிய இலக்கணங்களுடன் செயல்படுவதில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.
பொது சுத்திகரிப்பு நிலையம் என்றால் அங்கு அனைத்து கழிவுகளும் சுத்திகரிக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு அங்கு செய்யப்படுவதில்லை. மாறாக, அனைத்து நிறுவனங்களின் கழிவுகளையும் ஆற்றிலோ, கடலிலோ கலந்து விடுவதுதான் நடக்கிறது. சாயப்பட்டறைகள் மற்றும் தோல் பதனிடும் ஆலைகளைப் பொறுத்தவரை தனியாக சுத்திரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து தப்பிப்பதற்கான சாக்கு தான் பொது சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.
திமுகவின் தேர்தல் அறிக்கையின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்
இப்படிப்பட்ட மோசமான திட்டத்தை செயல்படுத்தப் போவதாக திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையின் 215ஆவது வாக்குறுதியில் ‘‘திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், வேலூர், அருப்புக்கோட்டை போன்ற நகரப்பகுதிகளில் இயங்கும் சாய ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் போன்ற தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்க, மத்திய நிதி உதவியுடன் CETP எனப்படும் கழிவு அகற்றும் பொதுவான சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திட திமுக வலியுறுத்தும்’’ எனக் கூறியுள்ளது.
பொது சுத்திகரிப்பு நிலையம் என்பது பயனற்றது; அது தோல்வியடைந்த தத்துவம் என 2000ஆவது ஆண்டில் உலக வங்கி அறிவித்து விட்டது. இராணிப்பேட்டையில் கடந்த 1990ஆவது ஆண்டு திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ’ராணிப்பேட்டை சிட்கோ’ தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் என்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் கொட்டப்பட்டன. 15 அடி உயரத்தில் அணை எழுப்பி சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவு நீர், 2015ஆம் ஆண்டில் அணையின் தடுப்புச் சுவர் இடிந்து, ஊருக்குள் ஓடியது. இதில் சிக்கி 10 பேர் இறந்தனர். இராணிப்பேட்டையில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தால் மக்கள் உயிருக்கு இன்னும் ஆபத்து நீடிக்கிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பெரியப்பட்டு பகுதியில் சைமா டெக்ஸ் என்ற பெயரில் பொது சுத்திரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை 2009ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் அறிவித்தார். ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஜவுளி ஆலைகளின் நச்சுக் கழிவுகளை பெரியப்பட்டு பொது சுத்திரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து, தண்ணீரில் கலந்து கடலில் விடுவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இராணிப்பேட்டை, கடலூர் மாவட்டத்திலும் மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத பொது சுத்திகரிப்பு நிலையம் என்ற பெயரில் சாயக் கழிவுகளை அங்கு வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை பாதிக்கும் வகையில் கொட்டுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
சுற்றுச்சூழல் இன பாகுபாடு
மக்களில் ஒரு பகுதியினர் நலமாகவும், செழிப்பாகவும் வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யும் தொழிலில் உருவாகும் கழிவுகளை, அதனால் எந்த வகையிலும் பயனடையாத அப்பாவி மக்கள் மீது கொட்டுவது ‘’சுற்றுச்சூழல் இன பாகுபாடு (Environmental Racism)’ என்றழைக்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ள இந்தத் தீய வழக்கத்தை தமிழ்நாட்டிலும் திணிக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. திமுகவின் சொந்த நலனுக்காக தீட்டப்பட்டுள்ள இந்தத் திட்டம் வாழ்வாதாரத்தை இழந்து வரும் விளிம்பு நிலை மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும்.
மக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் பாமக இத்தகைய நாசகர திட்டங்களை அனுமதிக்காது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் பதவியேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அரசிடம் வலியுறுத்தி பொது சுத்திகரிப்பு நிலையங்கள் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலையை பாமக உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’கருத்து மோதல்களை தேர்தலோடு மறந்து சகோதர உறவுகளாக வேண்டும்’ - ஸ்டாலின்