வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறி வாக்கரசியலை சந்தித்துவருகிறது. ஆரம்ப காலங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த கட்சி கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்று முழங்கி தனித்து களமிறங்கியது.
மேலும், பார் உள்ளவரை இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பாமகவினருக்கு உற்சாக ஊசி செலுத்தினார்.
எனவே திமுக, அதிமுகவுடன் போர் புரிந்து தமிழ்நாட்டில் தங்கள் கொடியை பறக்கவிடுவோம் என உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றனர் பாட்டாளி சொந்தங்கள். ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கை கோர்த்து, சொந்தங்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார் மருத்துவர் ராமதாஸ்.
அதை அலட்டிக்கொள்ளாத பாட்டாளி சொந்தங்கள் மருத்துவர் எவ்வழியோ நாங்களும் அவ்வழியே என்று தேர்தல் பணியாற்றினார்கள். ஆனால், 25 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது.
இந்நிலையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “உள்ளாட்சி தேர்தலில் இதே கூட்டணி தொடரும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே பாமகவின் இலக்கு. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இருக்காது” என்றார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று சொல்வதும், தேர்தல் நேரத்தில் அக்கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும் ராமதாஸுக்கு புதிது இல்லைதான். இருந்தாலும் இந்த கூட்டணி கதைக்கு ஒரு எண்டு இல்லையா என்ற தொனியில் பதிவிட்டுவருகின்றனர்.