சென்னை: தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்கள் காலியாகவுள்ளன. இதற்காக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில், நான்கு இடங்கள் திமுகவிற்கும், இரண்டு இடங்கள் அதிமுகவிற்கும் கிடைக்கவுள்ளன. இதில், திமுக சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் ஏற்கனவே தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில், இன்று (மே 30) காலை சென்னை தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் ப.சிதம்பரம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் ப.சிதம்பரத்திற்கு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும் வேட்புமனு தாக்கலின்போது, மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கொறடா விஜயதாரணி, சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, பிரின்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? செங்கோட்டையன் சொன்ன குட்டிக்கதை