திருப்பத்தூர்: பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று (ஜனவரி 16) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஏலகிரியில் உள்ள மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து காவல் தெய்வத்திற்கு 200-க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து, பாரம்பரிய சேவை நடனமாடி உற்சாகமாக காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை கிராமத்தில் 22 கிராமங்கள் உள்ளன. அதில், நிலாவூர் கிராம பகுதி மலைவாழ் மக்களின் பாரம்பரியமாக கதவு நாச்சியம்மன் காவல் தெய்வம் கோயில் உள்ளது.
இந்த கோயில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை தொடர்ந்து 3 நாட்களாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, முதல் நாள் போகி பண்டிகை மற்றும் இரண்டாவது நாள் மாட்டு பொங்கலில் பால் மற்றும் உழவு தொழிலுக்கு பயன்படுத்தி வரும் மாடுகள் மற்றும் கன்றுகள் மாடுகளுக்கு வர்ணம் தீட்டி புதிய கயிறு கட்டியுள்ளனர். தொடர்ந்து, புதிய பானையில் புத்தரிசி பால், நெய், வெல்லம் போட்டு பொங்கலிட்டு படையல் போட்டு மாடுகளுக்கு உணவளித்து மிகவும் சிறப்பாக பாரம்பரியமாக கொண்டாடியுள்ளனர்.
இதையும் படிங்க: நாங்களும் பொங்கல் கொண்டாடுவோம்.. சென்னை ஏர்போர்ட் சிஐஎஸ்எப் வீரர்கள் அதகளம்..!
இந்த நிலையில், இன்று காணும் பொங்கலையொட்டி, மலைவாழ் கிராம மக்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர், தங்களது காளைகள் மற்றும் பசு மாடுகளுக்கு மஞ்சள் பூசி வர்ணம் தீட்டி அலங்கரித்து ஒரே இடத்தில் பட்டியில் அடைத்துள்ளனர். பின்னர், காவல் தெய்வாமாக விளங்க கூடிய கதவு நாசியம்மனுக்கு பொங்கல் படையலிட்டு, மேள, தாளங்களுடன் பூஜை செய்து மாடுகளுக்கு உணவளித்தனர்.
பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அதனைத்தொடர்ந்து, மக்கள அனைவரும் ஒன்றாக பாரம்பரிய நடனமான சேவையாட்டம் நடனம் ஆடி, பாடி பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.