தமிழ்நாட்டின் 47ஆவது தலைமைச் செயலாளராக டாக்டர் ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார். மத்திய அரசின் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை, ஐந்து நாள்களுக்கு முன்பு மத்திய அரசு பணியிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ராஜீவ் ரஞ்சன்?
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை செயலாளராக இருந்த இவர், 2018இல் மத்திய அரசுப்பணியில் நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு அரசின் நிதித் துறை, தொழில் துறை, வருவாய்த் துறை எனப் பல்வேறு துறைகளில் செயலாளர், முதன்மைச் செயலாளர் பதவிகளில் பணியாற்றியவர்.
புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், வரும் செப்டம்பரில் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று கொண்டதை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ராஜீவ் ரஞ்சன் வாழ்த்துப் பெற்றார்.
தலைமைச் செயலாளர் டு அரசின் ஆலோசகர்
1985ஆம் ஆண்டு ஐஏஎஸ்-இல் தேர்வான இவர், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். தமிழ்நாட்டின் 46ஆவது தலைமைச் செயலாளராக க. சண்முகம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அரசுகளின்கீழ் பல ஆண்டுகள் நிதித் துறைச் செயலாளராகப் பணிபுரிந்தவர் சண்முகம். கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப் பின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டத்தில் (சேலம்) உள்ள வாழப்பாடியில் பிறந்தவர். கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வேளாண் பட்டப்படிப்பு முடித்தார்.
அவரது பதவிக்காலம் 2020 ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், கரோனா தொற்றின் காரணமாக அவரது பதவிக்காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் (ஜன.31) ஓய்வுபெற்ற அவர், இன்று (பிப்.1ஆம்) முதல் ஓராண்டுக்கு அரசின் ஆலோசகராக இந்தப் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.