தமிழ்நாட்டின் 46ஆவது தலைமைச் செயலாளராக சண்முகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிறந்தவர். கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் முதுநிலை வேளாண் பட்டப்படிப்பு முடித்தார்.
நிதித்துறைச் செயலராக தொடர்ந்த அவர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப் பின் தலைமைச் செயலராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், கரோனா தொற்றின் காரணமாக அவரது பதவிக்காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் ஓய்வுப்பெறும் அவர், அரசின் ஆலோசகராக ஓராண்டு நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 47ஆவது தலைமை செயலாளராக டாக்டர் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளத்துறையின் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை, ஐந்து நாள்களுக்கு முன்பு மத்திய அரசு பணியிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ்நாடு அரசின் நிதித்துறை, தொழில்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத் துறை என பல்வேறு துறைகளில் செயலாளர், முதன்மை செயலாளர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.