சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தில் தென்னிந்திய பிரபலங்களான தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தமிழகம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ஜெயிலர் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது ரஜினிகாந்த் இமயமலையில் உள்ளார்.
தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டிருந்த ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தைப் பார்த்து கொண்டாடி வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ரூ.44 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் ரூ.23 கோடி , கர்நாடகாவில் ரூ.11 கோடி, கேரளாவில் ரூ.5கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.10 கோடி மற்றும் மற்ற மாநிலங்களில் ரூ.3 கோடி என வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூலித்த படமாக விளங்கிய அஜித்தின் துணிவு பட சாதனையான ரூ.25 கோடியை முறியடித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 44 கோடி வசூல் செய்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்தியா முழுவதும் 'ஜெயிலர்' திரைப்படம் இரண்டாவது நாள் செய்த வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் வசூல் நேற்றும் (ஆகஸ்ட் 10ஆம் தேதி) அதிகரித்து காணப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.27 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.75 கோடியும் உலகம் முழுவதும் ரூ.96 கோடியும் வசூலித்து உள்ளது.
மேலும் மூன்றாவது நாளான இன்றும் ரூ.30 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை என்பதால் தமிழக வசூல் மட்டும் ரூ.100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எப்போதுமே தான் நான் நம்பர் ஒன் என்பதை ரஜினி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்று சமூக வலைதளங்களிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.