நடிகர் ரஜினிகாந்தின் அகில இந்திய ரசிகர் நற்பணி மன்றத் தலைமை நிர்வாகியாக இருந்த, சுதாகர் (71) என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள சுதாகர் வீட்டிற்குச் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, 'கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை சரியில்லை. பல இடங்களில் முயற்சித்தோம். ஆனால், அவர் இவ்வளவு சீக்கிரமாக நம்மை விட்டுப்போவார் என்று எதிர்பார்க்கவில்லை.
எப்போதும் நான் சந்தோஷமாக இருக்கனும். நான் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவரது யோசனையாக இருந்தது. அப்படி ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்' எனத் தெரிவித்தார்.
சுதாகருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் அவர் நடிகர் ரஜினியின் கல்லூரி காலங்களில் இருந்தே நண்பராக இருந்துள்ளார். பின்னர் ரஜினி பெரிய நடிகராக மாறிய பிறகு, அவரது ரசிகர் மன்ற நிர்வாகியாக சுதாகரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு மாரடைப்பா..? வதந்தி குறித்து நடிகர் விமல் விளக்கம்!