ஜனவரியில் கட்சித் தொடக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல. வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!
ரஜினியின் இந்த ட்வீட் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி தனது ரசிகர்கள் மத்தியில் அறிவித்ததிலிருந்து அவரது அரசியல் பிரவேசம் எப்போது இருக்கும் என அவர் ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கினர்.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9749546_super.jpg)
ஒரு வழியாக ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் இந்த உற்சாகத்தை அடைய ஏறத்தாழ 25 வருடங்கள் ஆகியிருக்கிறது.
தனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது என அவர் வெளிப்படுத்தியது 1995ஆம் ஆண்டு நடைபெற்ற பாட்ஷா பட மேடையில். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது இதற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அப்போதைய அமைச்சரும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே ரஜினி திரியை கொளுத்திப்போட அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா கொந்தளித்தார்.
இந்தச் சூழலில் மூப்பனார் காங்கிரஸிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தார். இதனையடுத்து அப்போதைய தேர்தலில் திமுக-தமாகா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார். அவர் வாய்ஸ் கொடுத்ததால்தான் அக்கூட்டணி வெற்றி பெற்றதாக பரவலாக பேச்சு எழ ஆரம்பித்ததும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் சத்தமாக குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9749546_moop.jpg)
இதனையடுத்து 1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு ரஜினி தனது ஆதரவுக் குரலை கொடுக்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. தனது ஆதரவுக் குரலுக்கு வலு குறைந்துவிட்டதோ என்று எண்ணிய ரஜினி அதன் பிறகு பெரும்பாலும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.
2002ஆம் ஆண்டு காவிரிப் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்தவர் - அதனால் அவர் எந்த கருத்தும் கூறாமல் இருக்கிறார் என அரசியல் கட்சியினரும், திரைத்துறையில் சிலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் காவிரிப் பிரச்னையில் எனது ஆதரவு தமிழ்நாட்டு மக்களுக்கே என்று தனது நிலையை தெளிவுபடுத்தினார். மேலும், நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க தயார் எனவும் அறிவித்தார்.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9749546_rar.jpg)
இந்தச் சூழலில் பாபா திரைப்படம் வெளியானது. அத்திரைப்படம் வெளியானவுடன் பாமகவினர் ரஜினிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசுவதாக அமைந்த அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு பாமகவினரின் செயல்பாடு இருந்ததால் ரஜினி ரசிகர்களுக்கும், பாமகவினருக்குமிடையே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த ரஜினி தனது ரசிகர்களிடம் பாமகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என கூறினார். ஆனால் அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அடுத்து வந்த தேர்தல்களில் ரஜினி தனது குரலை குறைத்துக்கொண்டார்.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9749546_star.jpg)
இதனைத் தொடர்ந்து ரஜினி எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, காலம் பதில் சொல்லும் என்று கூறிவிட்டு நகர்ந்துகொண்டிருந்தார். 2014ஆம் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தமிழ்நாட்டுக்கு வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மோடி நல்ல நிர்வாகி அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார். இதனால் அந்தத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு பாஜக தலைமையிலான கூட்டணிக்கு என்று பேச்சு அடிபட ஆரம்பித்தது. ஆனால் ரஜினியோ அமைதி காத்தார்.
இச்சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான ஜெயலலிதா குறித்து கேட்டபோது ”மகிழ்ச்சி” என்று முடித்துக்கொண்டார். இதனால் ஜெயலலிதாவுக்கு எதிரானவர் ரஜினி என்ற பிம்பத்தை அவர் உடைக்க ஆரம்பித்திருக்கிறார் என்ற பேச்சு அப்போது எழுந்தது.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9749546_jaya.jpg)
இப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதா உயிரிழக்க, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கருணாநிதியைச் சந்தித்த அவர், அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார்.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9749546_jaya.jpg)
ரஜினியின் வேகத்தைப் பார்த்த ரசிகர்கள் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று எதிர்பார்த்திருக்க, மீண்டும் அவர் சைலண்ட் மோடுக்கு போனார். இதற்கிடையே, அவரது உற்ற நண்பர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிவிட்டார். ஆனாலும் ரஜினி கட்சி ஆரம்பிக்காமல் கருத்து மட்டும் சொல்லிவந்தார். இதனால் அவரும், அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும், அரசியல் கட்சியினராலும் கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகினர்.
எப்போதுதான் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ற நீண்ட கேள்விக்கு, ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31ஆம் தேதியில் அறிவிப்பு என்று பதிலளித்திருக்கிறார். இருந்தாலும், ஜனவரியில் கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அவர் தாக்கத்தை நிகழ்த்துவாரா என்பது சந்தேகம்தான் என ஒருதரப்பினர் கூறிக்கொண்டிருக்க, எப்படி இருந்தால் என்ன எங்க தலைவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். எங்களின் 25 ஆண்டு கால கோரிக்கை ஒருவழியாக நிறைவேறியிருக்கிறது என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் அவரது ரசிகர்கள்.