சென்னை: நீண்ட நாள்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் தலைமையில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (ஜூலை.12) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசம் மீண்டும் அவரது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பைத் தூண்டியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்கள் மன்றத்தைக் கலைத்து, மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
அரசியலுக்கு நோ சொன்ன ரஜினி
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் ரஜினி கூறியுள்ளார். இந்தப் பரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகி குமார், ”தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தலைவர் கூறியிருந்தார்.
அவர் அரசியலுக்கு வரும்போது, கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்றும், ரசிகர்கள் நலனையும் தனது உடல்நிலையும் கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிக்கை மூலமாக தலைவர் தெரிவித்திருந்தார்.
மக்களுக்கு சேவை
தற்போது அமெரிக்கா சென்று உடல்நிலை சரியான பிறகு இன்று மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார். இதில் ”ஐந்து ஆண்டுகளுக்கு அரசியல் வேண்டாம். மக்கள் மன்றம் முன்பு இருந்தது போலவே நற்பணி மன்றமாக செயல்படும்” எனத் தெரிவித்தார். அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறோம்.
உண்மையான தலைவனின் ரசிகர்களாகிய நாங்கள், நற்பணி மன்றத்தில் முன்னர் எப்படி மக்களுக்கு சேவை செய்தோமோ அதே போலவே, வரும் நாள்களில் மக்களுக்கு செய்வோம்” என்றார்.
இதையும் படிங்க: கால சூழலால் சாத்தியப்படவில்லை- ரஜினிகாந்த்!