சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2 இன் கீழ் ரூ.277.04 கோடி மதிப்பில் 60.83 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடி மதிப்பில் 107.57 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடி மதிப்பில் 1.05 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிராதன பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சென்னை முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்த புதிதாக அமைக்கும் மழை நீர் வடிகால் பணிகளால் மக்கள் பல இடங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு முறை வாகனங்கள் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்ட குழிக்குள் விழுந்து விடுகின்றன, அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து இறந்துள்ளார்.
இனிவரும் காலங்களில் விபத்துக்களை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் இடத்தில் தடுப்புகளை அமைத்து தடுப்புகள் முழுவதும் பச்சை நிற வலை கொண்டு மூடி வருகின்றனர்.
பொதுமக்கள் செல்லும்போது தடுப்புகளுக்கு இடையே கடந்து செல்லாமல் முறையாக தடுப்புகளை சுற்றி கடந்து செல்லவும், தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மோட்டார் வாகன திருத்தச் சட்டம் இன்று முதல் அமல் - அதிகரித்தது அபராத தொகை..