சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாட்டிலுள்ள தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. வட தமிழ்நாட்டில் கணிசமாக மழைப்பொழிவு இருந்தாலும், அது இயல்பை விடக் குறைவாகவே பதிவாகி உள்ளதாகச் சென்னை வானிலை மண்டலம் அவ்வப்போது தகவல் தெரிவித்தது.
நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாட்டில் பரவலாகக் கனமழை முதல் மிதமான மழையானது பெய்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நாகை- சென்னை இடைய உள்ள கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் சில உள் மாவட்டங்களிலும் கன மழையானது பெய்தது.
கடந்த இரண்டு நாட்களாக(நவ.16 மற்றும் 17), தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 17-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் பதிவான மழை அளவு என்பது 245மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 288.9மி.மீ. அதனால் தற்போது பதிவான மழைப்பொழிவு, இயல்பை விட 15 சதவீதம் குறைவாக இருந்தாலும், -19% முதல் +19% வரை இயல்பு அளவுக்குள் வருவதனால், இந்த மழைப்பொழிவு அளவு இயல்பு அளவாகக் கருதப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்தப் பதிவு இயல்பு அளவு என்றாலும், வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 58% சதவீதம் வரை குறைவாகப் பதிவாகி உள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இம்முறை பருவகாலம் என்பது, வடதமிழ்நாட்டில் குறைவாகவும், தென் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இம்முறை வட மாவட்டங்களுக்கு போதிய அளவு மழை தரக்கூடிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியோ மண்டலமோ உருவாகவில்லை.
தற்போது மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமும் வடக்கு ஒடிசா பகுதி வழியாக வங்கதேசத்திற்குச் சென்று விட்டது. தற்போது, பூமத்தியரேகை பகுதியில் காற்றின் சுழற்சியானது தென்தமிழகத்திற்கு சாதகமாக இருந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இயல்பான அளவு மழைப்பதிவு கொண்ட மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.
இம்முறை கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவ.17ஆம் தேதி வரையில் இயல்பை விட அதிகமாக 83% கன்னியாகுமரியில் மழைப்பதிவாகி உள்ளது. மேலும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ஈரோடு, கோவை, தேனி, மதுரை ஆகிய இடங்களில் இயல்பை விட அதிகாமக மழை பதிவாகி உள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்