சென்னை: பெரம்பூர் பணிமனையில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வரும் முஸ்தபா அலி என்பவருக்கும் அவருடன் பணிபுரியும் கிரேன் ஓட்டுநர் ஜெயபாலன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முஸ்தபா அலியை ஜெயபாலன் இரும்பு கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஸ்தபா அலியுடம், பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து, அதனடிப்படையில் ஜெயபாலனைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் குற்றவாளி ஜெயபாலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து 2019ஆம் ஆண்டு ஜெயபாலன் சென்னை 21ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், காலதாமதமாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் சாட்சிகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்பதால் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஊழியர்களின் சாட்சியத்தின் அடிப்படையிலும் வழக்கை விசாரித்து நீதிமன்றம் சிறை தண்டனை உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, 21ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹரிஹர குமார், ஜெயபாலனுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பில் 'எம்ஜிஆர்' பாட்டு பாடியதால் சலசலப்பு!