தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் மோடி நேற்று முன்தினம் (பிப்.13) பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்குவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அப்போது, அவர் திட்டங்களை மட்டும் தொடங்கிவைத்து விட்டு மக்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். அவர் மக்களை சந்தித்திருக்க வேண்டும்.
ஆனால், ராகுல் காந்தி அப்படி அல்ல. பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய மூன்று நாள்களில், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து தென் மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்க உள்ளார். அப்போது, தொழிலாளர்கள், மீனவர்களின் பிரச்னைகளை கேட்டறிகிறார்" என்றார்.
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ரூபாய் 25 உயர்த்தப்பட்டது என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், "தொடர்ந்து பிப்ரவரி 15 ஆம் தேதி ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 785 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் ரூபாய் 220 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு காரணமாக லட்சக்கணக்கான குடும்ப பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பாஜக அரசை ஏதிர்த்தும் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும். 2015 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கோரிக்கைக்கு ஐந்தாண்டுகள் கழித்து தேர்தலுக்கு 60 நாள்கள் இருக்கும் நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், அதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
இதன்மூலம் 7 பிரிவுகளாக இருந்த சமுதாயம் ஒரே பிரிவாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதை நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி குரல் கொடுத்து வந்தது. காங்கிரசின் கோரிக்கைக்கு காலம் கடந்து வெற்றி கிடைத்திருக்கிறது. மெட்ரோ ரயில் தொடக்க திட்டத்துக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 14 ஆயிரத்து 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 45 கி.மீ. தூரத்திற்கு சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை அமைக்கப்பட்டு தற்போது பயணிகள் பயன்பாட்டில் உள்ளன.
இதற்காக ஜப்பான் வங்கியிடம் ரூபாய் 8 ஆயிரத்து 590 கோடி கடன் பெற்றுத் தந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பொறுப்பேற்றது முதல் வரம்புகளை மீறி பேசி வருகிறார். வருகிற சட்டப் பேரவை தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும் இடையே நடக்கிற யுத்தம்.
யார் தேசபக்தர்கள்? யார் தேச விரோதிகள்? இதற்கு மக்கள்தான் பதில் கூற வேண்டும். வேளாண் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குகிற காவிரி டெல்டா விவசாயிகள் வாங்கிய கடனில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 1124 கோடி. ஆனால், சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு மட்டும் ரூபாய் 2 ஆயிரத்து 400 கோடி தள்ளுபடி.
இதை ஒப்பிடுகிற போது ஆளுங்கட்சியினர் விவசாயிகள் பெயரில் மிகப்பெரும் தொகையை கடனாக பெற்று இன்றைக்கு கடன் ரத்து மூலம் சலுகை அடைந்துள்ளனர். இதன்மூலம் பாரபட்சமான நடைமுறையை அதிமுக கையாண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் மகா பஞ்சாயத்தில் ராகுல் உரை!