திமுக மூத்தத் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து, பல கட்சித் தலைவர்களும், அவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மாநிலங்களவை எம்பி ஆர்.எஸ்.பாரதி பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக தோன்றிய காலம் முதலே 71 ஆண்டு காலமாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து இயக்கத்தை வழிநடத்தியவர் பேராசிரியர். கழகத்தின் தொழிற்சங்க செயலாளராகவும், பொருளாளராகவும், 43 ஆண்டு காலம் கழகத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார்.
அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்றோருடன் தலைமுறைகள் கடந்து கட்சியில் இருப்பவர் பேராசிரியர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, பல தலைவர்கள் முன்னே ஸ்டாலின் கழக தலைவராக வேண்டும் என்று பகிரங்கமாக பேசி, தற்போது ஸ்டாலினை தலைவராக அமரவைத்தது வரலாற்றிலேயே சிறப்பான ஒன்று.
98 ஆண்டு காலம் அவர் வாழ்ந்தார் என்றாலும், அவரிடத்தில் சலிப்போ, வெறுப்போ எந்தத் தொண்டனுக்கும் ஏற்பட்டதில்லை. 1962ஆம் ஆண்டிலிருந்து அவருடன் நான் பழகியிருக்கிறேன். சம்பத், எம்ஜிஆர் பிரிந்தபோது, திமுகவுக்கு பல சோதனைகள் வந்தன. மற்றவர்கள் பிரிந்தபோதும், இந்த இயக்கத்தில் உறுதியாக நின்று, இந்தியாவே உயர்ந்து பார்க்கும் அளவுக்கு, இன்று ஸ்டாலினின் வெற்றியைக் கண்டுவிட்டுச் சென்றுள்ளார் பேராசிரியர். இதை எண்ணி மனம் நெகிழ்கிறது என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க... திமுக மூத்தத் தலைவரும், பொதுச்செயலாளருமான அன்பழகன் காலமானார்