சென்னை: பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், "பூங்கா அமைந்துள்ள இடத்தில், 21 ஏக்கர் கோவில் நிலம் என்று கூறி ஆக்கிரமித்த இடத்திற்கான குத்தகை தொகையை வழங்க கோரி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தது.
நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்து இந்த வழக்கு அண்மையில் நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 1995 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் வருவாய்த் துறையினர் கோவில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ் லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.
குயின்ஸ் லேண்ட் நிலத்தை மீட்க உத்தரவு
மேலும் அவற்றின் குத்தகை 1998இல் முடிவடைந்துவிட்டதாகவும் சுட்டிகாட்டப்பட்டது. வருவாய்த் துறையினருக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் இடையே உள்ள பிரச்னையை, தங்களுக்கு சாதகமாக குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டுள்ளது என வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்த உள்ள கோவில் நிலங்களை நான்கு வாரத்தில் மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அந்த நிறுவனம் வருவாய்த் துறைக்கு 1.8 கோடி ரூபாய், கோவிலுக்கு 9.5 கோடி ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
இந்த உத்தரவை எதிர்த்து குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தை நடத்தும் ராஜன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் "சம்பந்தப்பட்ட நிலம் வருவாய்த்துறைக்கானதா அல்லது இந்து சமய அறநிலையத்துறைக்கானாதா என முடிவு செய்யப்படாத நிலையில் இந்து அறநிலையத்துறையின் மூலம் தங்களை வெளியேற்றியது தவறு" என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட நிலம் யாருக்கு சொந்தமானது என்று முடிவு செய்த பின்பே தங்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாத் உபாத்தியாயா மற்றும் சத்திக்குமார் குமார குரூப் அமர்வு முன்பு இன்று (அக்.28) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இவர்களுடைய ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு இந்த நிலம் அரசுக்குத்தான் சொந்தம். விவசாயம் செய்வதற்காக குத்தகைக்கு விடப்பட்டது, ஆனால் விவசாயம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!