சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம் ஏரி ஏற்கனவே வறண்டுவிட்டது. தற்போது புழல் ஏரியும் போதிய மழையின்மை காரணமாகவும் கடும் வெயிலாலும் நீர்வரத்து இன்றி வறண்டு ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கி காட்சி அளிக்கிறது. இந்த தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ராட்சத குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து அனுப்பப்பட இருக்கிறது.
இதற்காக ராட்சத குழாய்களுடன் மின் மோட்டார்கள் பொருத்தும் பணியில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏரியில் இருக்கும் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் எடுப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் கோடை தொடங்குவதற்கு முன்னதாகவே ஏரியில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் ஏரியை தூர்வாருவதற்காக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் எடுத்து முடித்தவுடன் தூர்வாரும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.