புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இறுதிகட்ட இருசக்கர வாகன பரப்புரையை மேற்கொண்டனர். இருசக்கர வாகன பரப்புரையானது கருவடிக்குப்பம் சித்தானந்த கோயில் முன்பிருந்து புறப்பட்டது. தொடர்ந்து இருசக்கர வாகன பரப்புரை கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், தென்றல் நகர் வழியாக புறா குளம் அருகே முடிவடைந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்ததால் எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, எதிரி கட்சி வேலையை பார்த்து வருகின்றார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஏனம் பகுதியில் உள்ள 5ஆவது தீவை ஆந்திர மாநிலத்திற்கு தாரைவார்த்து கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் அதற்கு கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒருவர் ஏனம் பகுதியில் உள்ள 5ஆவது தீவு ஆந்திராவிற்கு சொந்தம் என்று உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவை கிரண்பேடியிடமும் கொடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கொடுத்த மனுவை கிரண்பேடி வாங்கியுள்ளார். ஏனம் பகுதி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், கிரண்பேடி எவ்வாறு அந்த மனுவை வாங்கிக் கொள்ளலாம். அவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது" என்று கேள்வியெழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நேரடி ஆட்சி; புதுச்சேரியில் மறைமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின்!