சென்னை : மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது ஆகியவை தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.05) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் கடந்த இரண்டு முறையும் திறக்கப்படவில்லை என்றும், நவம்பர் 9ஆம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும் என்றும், இதுவரை மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் ஊரடங்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதால் பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வகையில் மெரினாவிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தள்ளுவண்டிக் கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவைத் திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக நவம்பர் 11ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க : அத்தியாவசிய பணியாளர்களுக்கான புறநகர் ரயில் சேவை தொடக்கம்!