கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்குப் பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு அரசு, இந்த மருந்தைப் பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஆர்செனிகம் ஆல்பம்-30 மருந்தை அனைத்து மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், தொற்று பாதித்தவர்களுக்கும் இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பாடியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஜேசய்யா அன்டோ பூவேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ”மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கேரளா, பஞ்சாப், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆர்செனிகம் ஆல்பம்-30 மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இம்மருந்துக்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தும், அது அமல்படுத்தவில்லை. எனவே இம்மருந்தை இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்செனிகம் ஆல்பம்-30 மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும், இந்த மருந்து கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பிபிஇ உடை அல்ல’ - நீதிமன்றத்தில் முறையீடு