கரோனா தொற்று பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க செயலாளரான வழக்கறிஞர் பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிதியுதவி போதாது என்றும், தற்போது ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, கரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் சுகாதார பிரச்னைகள் மட்டுமல்லாமல், பொருளாதார வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ளதாகச் சுட்டிக் காட்டி, 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது எனக் குறிப்பிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.
தற்போதைய சூழ்நிலையை முழுமையாக அறிந்துள்ள அரசு நிர்வாகம், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண தகுந்த நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்கும் எனவும், நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.