சென்னை தாம்பரத்தில் சென்னை கிறிஸ்துவ கல்லூரி உள்ளது. இங்கு நீண்ட காலமாக பணிபுரியும் உயிரியல் துறை பேராசிரியர்கள் ரவீன், சாம் டேனியல்சன் ஆகியோர், மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முக்கியமாக சுற்றுலாச் செல்லும்போது மாணவிகளிடம் மிகவும் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் துறைத் தலைவர் மற்றும் பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் ஐ.சி.சி. குழுவிற்கு புகாரை அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனைக் கண்டித்து உயிரியல் துறையில் இளநிலை பட்டம் படிக்கும் மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே மூன்று நாட்களாக, உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐ.சி.சி. குழு விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டது. உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராடிவரும் மாணவர்கள் தரப்பில் இதுவரை காவல் துறையில் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.