சென்னை: கரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டன. அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் இளங்கலை இறுதி ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர்களை தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க உயர்கல்வித் துறை ஆலோசித்து வருகின்றது. அதனடிப்படையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், ஒரு வகுப்பிற்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல கல்லூரி வளாகங்களை தினசரி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திடவும், வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு தினசரி உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், விடுதிகளைத் திறக்கவும், விடுதி அறைகளில் தங்கவுள்ள மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, அதன் பிறகு விடுதிகளில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய பருவத்தேர்வுகள் தற்பொழுது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்தத் தேர்வுகள் முடிந்த பின்னர் கல்லூரிகளைத் திறப்பதற்கான அறிவிப்பினை முறைப்படி முதலமைச்சர் வெளியிடுவார் என உயர்கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.