சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி போதை தடுப்பு நடவடிக்கைக்கான பணிகளை மாதவரம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு தடை செய்யப்பட்டு போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் மணலி பாடசாலை தெருவில் உள்ள பெட்டிக்கடையை கண்காணித்தனர். அப்போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து கடையின் உரிமையாளர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த குணசேகர்(38), மணலி பெரிய தோப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(44) ஆகிய இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஆறு மாதங்களாக சுமார் 300 கிலோ எடை கொண்ட குட்கா, ஹான்ஸ், புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதன் மூலம் இவர்கள் ரூ. 6 லட்சம் சம்பதித்ததாகவும் தெரிவித்தனர். இதன் பின் கடையில் இருந்த போதைப் பொருள்கள் அதன் மூலம் கிடைத்த வருமானத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மணலி காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.