குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 விழுக்காடு இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையில் இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2013-14 முதல் 2018-19 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெற்று வருகின்றனர். அதன் அடிப்படையில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி. அல்லது 1 ம் வகுப்பு) பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் ஆன்லைன் முலம் நிரப்புவதற்கு பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். இதற்கு பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். பெற்றோர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் போன்றவற்றில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அலுவலகங்களில் விண்ணப்பத்தினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளியின் முக்கிய நுழைவு வாயிலில் விளம்பரம் வைக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன.
மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளிகளும் http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அந்தத் துறையிடம் இருந்து பெற்று தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.