தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிரப்பப்படாமல் உள்ள 55 ஆயிரம் இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு வரும் 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இலவச கட்டாய மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
8 ஆயிரத்து 608 தனியார் சுயநிதி பள்ளிகளில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்களுக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை இணையதளம் மூலம் 86 ஆயிரத்து 318 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், அக்டோபர் 1ஆம் தேதி, குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 55 ஆயிரம் இடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான நடைமுறைகள் 10ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்ட சேர்க்கை முடிந்த பின்னர் காலியாக உள்ள இடங்கள் 10ஆம் தேதி பள்ளிகளிலுள்ள தகவல் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்திலும் வெளியிடப்படும்.
அக்டோபர் 12ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் சேர்கைக்கு விண்ணப்பிக்கலாம். அவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் குறித்த விபரங்களும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் நவம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.
பள்ளி வாரியாக காலியாக உள்ள இடங்களை விட, கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் நவம்பர் 12ஆம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கு உரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சேர்கைக்கு தேர்வான நபர்களின் பெயர் பட்டியல் பள்ளித் தகவல் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உரிமையியல் நீதிபதி பணிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு