சென்னை: காசிமேட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேஷுவலாக கையில் கித்தார் பையுடன் நேற்று (ஆகஸ்ட்.03) சென்றார்.
தொடர்ந்து, அங்கு அந்நபர் தகராறில் ஈடுபட்டதுடன், தான் கொண்டு வந்த பையில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளார். மேலும், தன்னைத் தடுத்தவர்களை திட்டியதுடன் அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருள்களையும் அவர் அடித்து நொறுக்கினார். இந்தச் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
காவல் துறை விசாரணை
அதனைத் தொடர்ந்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராயபுரம் காவல் துறையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து, அவரிடம் கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர் கோயம்புத்தூர் மாவட்டம், உப்பிளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (30) என்பதும், இவர் அந்தத் தனியார் தொலைக்காட்சிக்கு போன் செய்தபோது எதிர்முனையில் பேசியவருக்கும், அவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.
நீ வாடா என் ஏரியாவுக்கு வாடா!
வாய்த் தகராறுக்காக இந்தப் பிரச்னை என காவல் துறையினர் விசாரித்தபோதுதான், ராஜேஷ் எதிர்முனையில் பேசியவரால் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செய்தது தெரியவந்தது.
‘உன்னால் முடிந்ததைப் பார்’ என தனியார் தொலைக்காட்சி ஊழியர் கூறியதால் ஆத்திரமடைந்த ராஜேஷ், ’உன் ஏரியாவுக்கே வரேண்டா’ என சினிமா பாணியில் கையில் கேடயம், கித்தார் பையுடன் புறப்பட்டு தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிய ராஜேஷ், ’நானும் ரவுடிதான்’ என கித்தார் பையில் இருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த கண்ணாடி, மேசை, கணினி ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளார். எதற்காக தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினார் என காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாசப் பேச்சு
முன்னதாக காவல் துறையினர் ராஜேஷை கைது செய்தபோது அங்கிருந்த தொலைக்காட்சி ஊழியர்கள் சிலர் அதனை வீடியோ எடுத்தனர். அப்போது அவர் ஆபாசமாகத் திட்டியதுடன், தான் செய்தவற்றையெல்லாம் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த இந்த தனிநபர் வன்முறைத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வைர மோதிரம் மிஸ்ஸிங்... ஜெட் வேகத்தில் கண்டுபிடித்த மதுரை காவல் துறை