சென்னை : சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வீஜி ராஜேந்திரன், முகலிவாக்கம் கட்டட விபத்தை சுட்டிக்காட்டி கட்டடங்கள் கட்டும்போது கட்டுமான நிலை வாரியாக அனுமதியளிக்க வேண்டும். சிஎம்டிஏ உள்ளாட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திட்ட அனுமதி பெறுவதற்கான கால அவகாசத்தை குறைக்க வேண்டும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதிக நிலங்கள் உள்ளதால் அடுக்குமாடக் குடியிருப்புகள் கட்ட வேண்டும். திருமழிசை துணைக்கோள் நகர பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ”திருமழிசை துணைக்கோள் நகர நிலம் கையகப்படுத்தியுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கப்படும். சிஎம்டிஏ எல்லைகளை விரிவுப்படுத்தி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அரசு, தனியார் அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டும்போதே சிஎம்டிஏ அலுவலர்கள், நிபுணர்கள் குழுவினரும் ஆய்வு செய்வது செயல்படுத்தப்படும்” என்றார்.