இது தொடர்பாக அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், "நாட்டில் குறைவாக கடன் வசதி பெற்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கடன் வசதி பெற்ற மாவட்டங்களின் பட்டியலை தயாரித்து, அதில் 90 விழுக்காடு மதிப்பீடும், குறைவாகக் கடன் பெற்ற மாவட்டங்களுக்கு 125 விழுக்காடு மதிப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடன் வசதி பெறாத பகுதிகளில் அதிக கடனளிக்க வங்கிகள் ஊக்குவிக்கப்படும்.
நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாவட்டங்கள் பட்டியலில் அதிகபட்சமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மாவட்டங்கள் (புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு) இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறையால் தமிழ்நாட்டிலுள்ள, தொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பது குறைய வாய்ப்புள்ளதாக பொருளதாார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிததத்தில், "சிறப்பாக செயல்படும் மாவட்டங்களிலிருந்து நிதியை மற்ற மாவட்டங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை பாகுபாட்டை காட்டும் விதமாக அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரேத்யக பேட்டியளித்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிடிஆர் தியாகராஜன், "கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களை கீழிறக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைகளால் தமிழ்நாட்டின் 100 விழுக்காடு மாவட்டங்கள் பின்தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குஜராத் நம்மைவிட உற்பத்தியில் தலா 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக உள்ளது.
இருப்பினும் அதிகக்கடன் வசதி பெறும் பட்டியலில் 12 மாவட்டங்களே இருக்கின்றன. ரிசர்வ் வங்கி கட்டளையிடன் அடிப்படையில் கடன் கொடுக்க வேண்டும் என்கிறது. எங்கு வங்கிக் கிளைகள் இருக்கிறதோ, எங்கு கடன் பெறும் தகுதி, திரும்பச் செலுத்தும் தகுதி இருக்கிறதோ, எங்கு பொருளாதாதர மற்றும் தொழில் வளர்ச்சி இருக்கிறதோ அங்குதான் கடன் வழங்க முடியும். தமிழ்நாட்டில் 11 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வங்கிக் கிளை உள்ளது. ஆனால் ஒடிசாவில் 600 சதுர கிலோமீட்டர் தூரத்துக்குதான் ஒரு வங்கிக் கிளை உள்ளது. வங்கியாளர்கள் யாரிடம் கடன் கொடுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் கூறுகையில், "வங்கிகள், விவசாயம், சிறு, குறு தொழில்கள், ஏற்றுமதி, வீடு, ஸ்ராட்அப் நிறுவனங்கள், புதுப்பிக்கப்பட்ட சக்தி, பள்ளி, சுகாதாரம், குடிநீர், சமூக கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து கடன் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஒட்டுமொத்த கடன் தொகையை மக்கள் தொகையுடன் வகுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட அதிக வளர்ச்சி பெற்ற, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படும். பிகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாததால் அங்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ள கடன்களை மக்கள் தொகையில் வகுத்தால் கடன் அளவு குறையும்.
எங்களிடம் பணம் இருக்கிறது, கடன் வாங்க யாரும் முன்வரவில்லை என சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் ராஜ்னீஷ் குமார் கூறுகிறார். கடன் வசதியை பயன்படுத்தும் இடத்திலிருந்து தேவைப்படாத இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. முறையாக கடனை திரும்பச் செலுத்தும் மக்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இந்த நடைமுறை அமையும். மற்ற மாநிலங்கள் ஏன் அதிகளவில் கடன் பெறவில்லை என்பதை ரிசர்வ் வங்கி கண்டறியவில்லை. அந்தப் பகுதியில் வங்கியில்லாமல் தனி நபர்களிடம் கடன் வாங்கும் பழக்கம் அதிகளவில் உள்ளன.
மாநிலங்களுக்கிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வை சரிசெய்வது ரிசர்வ் வங்கியின் பொறுப்பு அல்ல, நாட்டின் நிதித் துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்து, விலைவாசியை கட்டுப்படுத்துவதே அதன் முக்கிய பணி" என்றார்.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்படும் நிலையில், இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்கிறார் ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் ராமசுப்ரமணியம் காந்தி. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், "பொருளதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் வகையில் குறிப்பிட்ட துறைகளுக்கு அதிகமான கடன் உதவி கிடைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது.
இதனால், நாட்டில் சில மாநிலங்கள் கடன் வசதி கிடைத்து வளர்ச்சி பெற்றன. குறைந்த வளர்ச்சி பெற்ற மாவட்டங்களுக்கு உதவும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், முன்னேற்றமடைந்த மாவட்டங்களுக்கும் கடன் கிடைப்பது குறையாது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு அதிகமாக கடன் கிடைக்கும். நலிவடைந்த மாவட்டங்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்த சுற்றிறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடன்தொகை அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது.
இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுபோன்ற அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகளும் நாட்டின் நலனுக்காக குறிப்பிட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: எதற்கும் தயாராகவே உள்ளோம் - ரிசர்வ் வங்கி ஆளுநர்