சென்னை: பொது பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்தினசபாபதி, பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இன்று (மே 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நடந்து முடிந்த தேர்வுகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை அளிக்கவில்லை என்பது வெளிப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எழுந்த பல்வேறு கோரிக்கைகளையும், பல்கலைக்கழக மாணவர்களின் தேர்ச்சி குறித்து ஏற்கனவே நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துகளையும் கவனத்துடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசு மீண்டும் தேர்வு நடத்தலாம் என்ற நியாயமான முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
தேர்ச்சி பெறாமல் போன அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்புத் தருவதும், தேர்ச்சி பெற்ற மாணவர்களில் தேர்வு முறையில் திருப்தி இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களும் தேர்வு எழுதலாம் என்கிற அறிவிப்பும், மாணவர்களுக்கு சமவாய்ப்பை கூடிய வரை உருவாக்கித் தரும் முயற்சியாகும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, மாணவர்களுக்கு பழக்கப்பட்ட தேர்வுத் தாள் அமைப்பில் மன அழுத்தம் இல்லாமல் அனைவரும் தேர்வு எழுதிட வழி செய்யப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது.
நடத்தப்பட இருக்கும் தேர்விற்குக் கட்டணம் ஏதும் செலுத்த அவசியம் இல்லை என்ற அறிவிப்பு, பேரிடர் காலத்தில் மாணவர்களும் அவர் தம் பெற்றோரும் சந்திக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் எடுத்து மேற்கொள்ளப்பட்ட முடிவு. இத்தகைய முடிவு பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பிக்பாஸ் வீடு மாதிரி ஆய்டுச்சு... அடுத்த எலிமினேஷன் யாரு?' - கமலை கலாய்த்த கஸ்தூரி