சென்னை: ஆதி திராவிட நலக்கூட்டமைப்பின் சார்பில் அறிவு சமூகம் என்ற அமைப்பு, ஆதி திராவிட நலப் பள்ளிகளை இணைப்பது குறித்து 3 நாட்கள் கருத்தரங்கை நடத்தியது. ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு போதுமான கட்டமைப்புகளை உருவாக்காமல், சமமான கல்வி கற்கும் வாய்ப்பினை அளிக்காமல் இணைப்பது என்பது அந்தப் பள்ளிகளை மூடுவதற்கு தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில் அரசு முடிவு செய்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் பரிந்துரைகள் குறித்து அறிவு சமூகத்தின் தலைவர் தமிழ்முதல்வன் கூறும்போது, ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்ட பலத்துறைப் பள்ளிகளை இனி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
அதில் குறிப்பாக ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளை இணைப்பது குறித்து நடத்தப்பட்ட கலந்தாய்வில் பல்வேறுக் கருத்துகளை முன் வைத்தனர். அதில் ஆதி திராவிடர், பழங்குடியினர் மக்களின் நலத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட பள்ளிகளையும், சொத்துக்களையும் பள்ளிக் கல்வித்துறைக்கு தாரை வார்ப்பது என்பது ஆதிதிராவிட மக்களின் சொத்துக்களை எடுத்து, மற்றவர்களுக்கு அளிப்பதாக அமையும்.
ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளுக்கு சொந்தமான பல ஆயிரம் காேடி மதிப்பிலான சொத்துக்களை பள்ளிக்கல்வித்துறைக்கு எடுத்துக்கொண்டு, பின்னர் மாணவர்கள் சேர்க்கை குறைவு என்ற காரணத்தைக் காட்டி பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் மூடத் திட்டமிட்டுள்ளனர். தேசியக் கல்விக் கொள்கையில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற 2 வகையில் மட்டுமே வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
பலவீனமான பள்ளிகளை அரசுப் பள்ளிகள் வளாகத்திற்குள் கொண்டு வருதல் அல்லது தனியார் பள்ளியுடன் இணைத்து விடுதல் ஆகியவை மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் என தனியாக கட்டமைப்பு இருந்தால் தேசியக்கல்விக் காெள்கை 2020 நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகாது. அதனை சிக்கல் இன்றி நடைமுறைப்படுத்துவதற்காகவே ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் கொண்டு வரப்படுகிறது.
இது போன்ற காரணங்களால் ஆதி திராட நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கக் கூடாது. இதற்கு எதிராக வரும் 15ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டமும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நாட உள்ளோம்'' என தெரிவித்தார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, ''ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு அதனை நிர்வகிக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, தேர்ச்சி குறைந்தால் அந்தத் துறையை நிர்வகிக்கும் அரசின் அதிகாரிகளைத் தலைமைச் செயலாளர் விசாரணை செய்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெள்ளை அறிக்கையாக தருமா? ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகள், அந்த மாணவர்கள் படிப்பதற்காக அந்தப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தப்பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதால் மட்டும் சாதி ஒழிந்து விடுமா? அரசுப் பள்ளியாக அறிவிப்பதால் மாணவர்களுக்கான கற்றல் வசதிகள் அதிகரித்து தரப்படுமா?. ஆதி திராவிட நலத்துறைப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி, 833 பள்ளிகளையும் அரசுப் பள்ளியுடன் இணைப்பு என்ற பெயரில் மூடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் சிறப்புப்பள்ளி, மாதிரிப் பள்ளி, தகைசால் பள்ளி என பாகுபாடு வைத்துள்ளனர். ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளை இணைத்தால் அந்த மாணவர்களை சிறப்புப் பள்ளிகளில் சேர்ப்பார்களா? அல்லது சாதாரணப் பள்ளியில் சேர்ப்பார்களா?’’ என கேள்வி எழுப்பினார். மேலும், “தேசியக்கல்விக் கொள்கை 2020 நிறைவேற்றுவதற்காவே ஆதி திராவிட நலத்துறைப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க உள்ளனர்.
தேசியக்கல்விக் கொள்கையை திமுக அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறினாலும், அரசு அதிகாரிகள் அதனை அமல்படுத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வி குறித்த முத்துகுமரன் குழுவின் அறிக்கையை முழுவதும் அமல்படுத்த வேண்டும். தேசியக்கல்விக் காெள்கை 2020 அமல்படுத்துவதற்கு எதிராக மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அந்தக் குழுவே ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளை இணைக்க வேண்டும் எனக் கூறினாலும் ஏற்க மாட்டோம். ஆதி திராவிட நலப்பள்ளிகளை இணைப்பதற்கும் பதிலாக அருகிலுள்ள பள்ளிகளை அறிவிக்க வேண்டும். அரசின் செலவில் முழுக்கல்வியையும் வழங்க வேண்டும். இந்தப் பள்ளிகளை இணைப்பது குறித்து கருத்துகளை கேட்க வேண்டும். ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளை இணைப்பதற்கு எதிராகப் போராடவும் தயாராக இருக்கிறோம். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கும் வகையில் மேம்படுத்த வேண்டும்’’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடக்கம்